Sunday, March 28, 2010

அங்காடித் தெரு-விமர்சனம்











 மகேஷ்(அறிமுகம்),அஞ்சலி,பாண்டி,பழ.கருப்பையா,ஏ.வெங்கடேஷ் இவர்கள் நடிப்பில்,நா.முத்துக்குமார் பாடல் வரிகளில்,ஜி.வி.பிரகாஷ் குமார்,விஜய் ஆன்டனி இவர்கள் இசையில்,ஜெயமோகன் வசனத்தில்,ஐங்கரன் தயாரிப்பில்,வசந்த பாலனின் கதை,திரைக்கதை,இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் அங்காடித் தெரு.

         தனது முந்தைய படைப்பில் (வெயில்) வாழ்க்கையின் காலச்சக்கரத்தில் சுழற்றியடிக்கப்பட்டு தோல்வியைத் தழுவிய மனிதனின் வாழ்வைப் படமாக்கிய வசந்த பாலன் அங்காடித் தெருவில் சென்னையில் பிழைப்புத் தேடிவந்த விளிம்புநிலை மனிதர்களின் வாழ்க்கையையும்,அவர்களின் தன்னம்பிக்கையையும்,மன உறுதியையும் காட்டியிருக்கிறார்.

           இரவு நேரத்தில் துரைசாமி பேருந்து நிலையத்தில் ஒரு இளங்காதல் ஜோடியின்(லிங்கு,கனி)குறும்புத்தனங்களுடன் படம் தொடங்குகிறது.அன்றைய இரவைக் கழிக்க இடமின்றி அவர்கள் உதயம் தியேட்டர் அருகில் உள்ள பிளாட்பாரத்தில் உறங்குகிறார்கள்.அப்போது எதிர்பாராவிதமாக அங்கே நடக்கும் ஓர் விபத்தில் அங்கே இருக்கும் பலர் பலியாகிறார்கள். அவர்களுடன் லிங்குவும்,கனியும் விபத்தில் சிக்குகிறார்கள்.லிங்கு பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறான்.அப்போது அவனுடைய பார்வையில் இருந்து படம் பின்னோக்கிப் பயனப்படுகிறது.

           திருநெல்வேலி அருகில் உள்ள இட்டமொழி கிராமத்தில் வசிக்கும் லிங்கு +2 தேர்வில் பள்ளியில் முதல் மாணவனாய் தேறியபோதும் தனது தந்தையின் திடீர் மரணத்தாலும்,குடும்பச் சூழ்நிலையாலும் சென்னை ரங்கநாதன் தெருவில் உள்ள பிரம்மாண்டமான ஸ்டோர்ஸ்-க்கு (நண்பர்களே! நம்புங்கள் அது சரவணா ஸ்டோர்ஸ் அல்ல! இது மெய்!) வேலைக்கு செல்கிறான்.அவனுடன் அவன் நண்பன் மாரிமுத்துவும்(+2 தேர்வில் தேர்ச்சி பெறாததால்) செல்கிறான்.அங்கே அவர்களுக்கு நிர்வாகத்தினர் தரும் சுகாதாரமற்ற உணவு,இருப்பிடம் மற்றும் அவர்கள் நடத்தும் கொத்தடிமை முறை அவர்களை அச்சம் கொள்ளச் செய்கிறது.அங்கே லிங்கு தன்னைப்போலவே குடும்பச் சூழ்நிலையால் வேலைபார்க்கும் கனியைச்(அஞ்சலி)சந்திக்கிறான்.அவர்களுக்குள் முதலில் சிறு மோதலும் பின்பு காதலும் ஏற்படுகிறது.





         அதே தளத்தில் பணி புரியும் சௌந்திரபாண்டியன்-செல்வராணி காதல் விவகாரம் நிர்வாகத்தினருக்கு தெரிய வர அதனைத்தொடர்ந்து வரும் விளைவுகளால் செல்வராணி தற்கொலை செய்து கொள்கிறாள்.

           இந்த நிகழ்வு லிங்குவின் மனதில் சிறு அச்சத்தை ஏற்படுத்தி விடுகிறது.இது கனிக்கு தெரிய வர அவள் லிங்குவை தவறாகப் புரிந்து கொள்கிறாள்.பின்பு லிங்கு அந்த அச்சத்திற்குரிய காரணத்தை விவரிப்பதும்,கனியின் தங்கை(நாகு) விவகாரத்தில் உதவி செய்வதாலும் கனியின் மனதில் மாற்றம் ஏற்படுகிறது.

          பின்பு அந்த கதைக்குரிய களம் சரவணா ஸ்டோர்ஸ் அல்ல! என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்காக அங்கே சினேகா நடிக்கும் விளம்பரப் படம் எடுக்கப்படுகிறது.அதனைத் தொடர்ந்து வரும் காட்சிகளில் அவர்களது காதல் விவகாரம் நிர்வாகத்தினருக்கு தெரிய வருவதும் ஏற்படும் விளைவுகளும் பகீர்!

      படத்தின் இறுதிக்காட்சியில் சற்றே மகிழ்ச்சி கலந்த உணர்ச்சிமயமான பாரத்தை பார்வையாளர்கள் தலையில் ஏற்றிவிடுகிறார் இயக்குநர்.

          இதனூடே 30 ஆண்டுகளாக பிளாட்பாரத்தில் கடை நடத்திவரும் வயதான கண்பார்வை குறைபாடுடைய பெரியவர்,சற்றே குள்ளமான மாற்றுத்திறன் கொண்ட கணேசன்,முன்பு பாலியியல் தொழிலாளியாக இருந்த அவனது மனைவி சின்னம்மா,காகிதம் பொறுக்கும் முஸ்லீம் பெரியவர்,பழைய துணிகளை துவைத்து சாயம் போட்டு ரூ.10 -க்கு விற்கும் இளைஞன்,வேலை கிடைக்காமல் கழிப்பறையை வைத்து தொழில் நடத்தும் இளைஞன் என ரங்கநாதன் தெருவின் நிஜமாந்தர்களையும்,அவர்களின் ஆசாபாசங்களையும் நம் கண் முன்னே நிறுத்துகிறார் இயக்குனர்.

         படத்தில் கவரும்படியாக உள்ள அம்சம் என்னவெனில் கவிதைத்தனமான காட்சியமைப்புகளும்,கூர்மையான வசனங்களும்தான்.தன் தோழியிடம் கனி கூறுவது, "சோஃபி உலகத்தில இந்த ஒரு ஆம்பிளையாட்டியாவது மான ரோசத்தோட இருக்கேனே!".இது உழைக்கும் பெண்கள் மட்டுமே உணரும் வலி.தங்கை நாகு அஸ்ஸாம் செல்லும்போது கனியிடம் கூறும் வசனங்கள்.பெரியவர் லிங்குவிடம், "விக்கத்தெரிஞ்சவந்தாய வாழத்தெரிஞ்சவே" என்பது,சின்னம்மா தனக்குப் பிறந்த மாற்றுத்திறன் உடைய குழந்தையைப் பற்றி முஸ்லீம் பெரியவரிடம் கூறுவது,படத்தின் இறுதியில் கனி "ஏ அப்பவைப் போலவே எங்கிட்ட எதுவும் சொல்லம போயிரு லிங்கு" என்று நினைக்கும்போது லிங்கு கூறும் இரண்டே வரி என படம் நெடுக அத்தனை அழகு.

        லிங்குவின் தந்தை வீட்டில் நுழையும்போது வானொலியில் தமிழ் மீடியம், English மீடியம் குறித்து இடம்பெறுவது, "கண்ணில் தெரியும் வானம்" பாடலின் காட்சியமைப்புகள்,கனியின் 13 வயது தங்கையின் சடங்கு-தீட்டு குறித்து இடம்பெறும் காட்சிகள்,எந்த ஒரு விபத்தும் சாதாரண மக்களையே பாதிப்பதாக காட்டுவது போன்றவை இயக்குனரின் சமூகம் சார்ந்த பதிவுகள்.அதுவும் கடைசி காட்சியில் கனி, "லிங்கு இன்னிக்கு ஊருக்குப் பணம் அனுப்பனும்" என்பது உழைக்கும் மக்களின் கடவுள் வாழ்த்து.

    






நாயகனாக மகேஷ் தன் முதல் படத்திலேயே இயல்பான நடிப்பினால் ஈர்க்கிறார்.நாயகியாக அஞ்சலி, ஏற்கனவே "கற்றது தமிழ்" படத்தில் ஆனந்தியாக அறிமுகமானவர்.இதில் கனியாக அட்டகாசம் செய்திருக்கிறார்.தன் தங்கையை ஹோம்-ல் இருந்து அனுப்பிவிட்டு லிங்குவிடம் வந்து "நாலு நாள் நல்லா ஜாலியா இருந்தா உன்னையதா யாரு யாரு- கேட்டா" என்பாள்.உடனே லிங்கு நீ என்ன சொன்ன என்பான்."ஒன்னு சொல்லல சிரிச்சேன்" சொல்லும்போது அவள் காட்டும் முகபாவங்கள் ஹைக்கூ கவிதை. "அப்ப நா திருச்செந்தூர்ல 10 படிச்சிட்டிருந்தனா அப்ப சேர்மத்துர சேர்மத்துர-னு ஒருத்தன் இருந்தான்"(இதாங்க இப்ப என் ரிங்-டோன்) என்று அவள் தன் பால்ய காதலை கூறும் 4 நிமிட காட்சிகள் கொள்ளை அழகு.

      இப்படி நல்லா நடிக்கிற நடிகைகளை விட்டுட்டு மும்பைல போயி நடிகைகளை தேடுறதா நினைச்சா ஐய்யோ! இவிங்க வேற எதையோ தேடுறாங்கனு மட்டும் நல்லா தெரியுது.

       நாயகனின் நண்பனாக வரும் பாண்டி படத்தின் கலகலப்புக்கு கைக்கொடுக்கிறார்.

       ஜி.வி.பிரகாஷ் குமார்,விஜய் ஆன்டனி இவர்கள் இசையில் பாடல்கள் மனதை அள்ளுகிறது.குறிப்பாக "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை"பாடலும், "கதைகளைப் பேசும் விழியருகே"பாடலும்.நா.முத்துக்குமாரின் வரிகளில் காதலும்,சமூகத்தின் மீதான அக்கறையும் தெறிக்கின்றன.

        ரிச்சர்டு எம்.நாதனின் ஒளிப்பதிவு ரங்கநாதன் தெருவின் குறுகலான சந்துகள்,செந்தில் முருகன் கடையின் உட்புறங்கள், சென்னையின் இருள்,இட்டமொழி கிராமம்,திருச்செந்தூர் என இயல்பாக பயணிக்கிறது.

       மலையாலத்தில் பல நல்ல படங்களை கேள்விப்பட்டு,சில நல்ல படங்களை பார்த்துவிட்டு தமிழில் வரும் படங்களை திட்டிக்கொண்டும்,தமிழ்ப்படம்-னு பார்த்தா அது தலைவி ஷகீலா நடிச்ச படத்தை அதுவும் பரங்கிமலை ஜோதி இல்ல மதுரை ராம்விக்டோரியலதான் பார்ப்பேன்னு இருந்த என்னை இதாண்டா தமிழ்ப்படம்-னு பொடனியில் அடித்துக் காட்டிய வசந்தபாலனுக்கு ஒரு காம்ரேட் சல்யூட்.

      ஏன்னா அவரும் ஒரு 'காம்ரேட்'தான்!.


உபரித் தகவல்:

       வசந்தபாலன் தனது அடுத்த படைப்பாக சு.வெங்கடேசன் அவர்கள் (இவர் சட்டமன்ற உறுப்பினர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டவர்) எழுதிய "காவல் கோட்டம்" எனும் (இது மதுரையைப் பற்றிய 200 வருட ஆய்வு நூல்) நூலில் வரும் "குற்றப்பிரிவு" சிறுகதையை படமாக்க உள்ளாராம்.

பிற்சேர்க்கை:

                          இப்படத்தைப் பற்றி பொதிகை டிவி,ஜெயா டிவி,கலைஞர் டிவி,விஜய் டிவி,இசையருவி மற்றும் அனைத்து தொலைக்காட்சிகளில் வந்த சிறப்பு நிகழ்ச்சிகள்,இசை வெளியீட்டு விழா,வசந்தபாலன் நேர்காணல், "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை" பாடலின் முழு பாடல் வரிகள் என இப்படத்தைப் பற்றிய அனைத்து வீடியோ தொகுப்புகளும் கிடைக்குமிடம்.
அ.ல.பாரதி அலெக்ஸெய் மணவாளன்,
மதுரை.
9094863694.



இந்தப் பதிவை எழுதியவர்,

அ.ல.பாரதி அலெக்ஸெய் மணவாளன்.